வெறுப்பு என்னும் புயலில் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது - ராகுல்காந்தி
மகாத்மா காந்தியின் லட்சியங்களையும், சிந்தனைகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் போராட உறுதியேற்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பீகார் மாநிலம் அராரியாவில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் உள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில்,
வெறுப்பு மற்றும் வன்முறையும் நிறைந்த சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது. அதே வெறுப்பு சித்தாந்தம் காந்தியின் கொள்கைகள், லட்சியங்களை நம்மிடமிருந்து பறிக்க முயல்கிறது. வெறுப்பு என்னும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது. இதுவே காந்திஜிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்' எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தள பதிவில்,
'தியாகிகள் தினத்தில், நமது தேசத்தின் நன்னெறிக்கான திசைகாட்டியான மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறேன். அவருடைய லட்சியங்களையும், சிந்தனைகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் போராட உறுதியேற்க வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவைப் பாதுகாக்கவும், நமது மக்களிடையே நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தவும் அனைத்தையும் செய்வோம் எனப் பதிவிட்டுள்ளார்.