சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள்-தர்ணாவால் பரபரப்பு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-20 18:45 GMT

பெங்களூரு:

கூச்சல்-குழப்பம்

கர்நாடக சட்டசபையில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி உள்பட பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்க் காா்கே பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகா் காகேரி அனுமதி வழங்க மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த விவாதத்திற்கு போலீஸ் மந்திரி அரக ஞனேந்திரா பதிலளிக்க தொடங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரியங்க் கார்கேவுக்கு பேச அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினர். அதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒரே நேரத்தில் குரலை உயர்த்தி பேசியதால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

தர்ணா போராட்டம்

இதையடுத்து பிரியங்க் கார்கே பேச சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பினர். பிரியங்க் கார்கே இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களுக்கும் பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர், மந்திரி அரக ஞானேந்திரா பதிலளித்த பிறகு பேச அனுமதி அளிப்பதாக உறுதியளித்தார். காங்கிரஸ் உறுப்பினர்களின் தர்ணா போராட்டத்தில் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்