அருணாசல பிரதேசம்: பா.ஜனதாவில் இணைந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர்
சட்டசபைக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங், நேற்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.
இடாநகர்,
அருணாசல பிரதேசத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
அங்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.இதற்கு மத்தியில் காங்கிரசின் 2 எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் பா.ஜனதாவுக்கு தாவினர்.
இதைத்தொடர்ந்து கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங், நேற்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் ஐக்கியமானார். மொத்தமுள்ள 4 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் பா.ஜனதாவுக்கு சென்றுள்ள நிலையில், தற்போது முன்னாள் முதல்-மந்திரி நபம் துகி மட்டுமே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இதேபோல் ஒடிசாவில் முன்னாள் மந்திரியும், தற்போதைய பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ.வுமான பிரேமானந்த நாயக், நேற்று பா.ஜனதாவில் இணைந்துள்ளார். இதேபோல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நரேன் பல்லை மற்றும் ராஜேந்திர குமார் தாஸ் ஆகியோரும் தங்கள் ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் இணைந்தனர். ஏற்கனவே மற்றொரு பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. அரவிந்த தாலியும், சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.