அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்துவோம் - காங்கிரஸ்

இந்த திட்டம் குறித்து முதலில் இளைஞர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

Update: 2022-06-20 04:46 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரெயில்களுக்கு தீவைப்பு, பஸ்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.காங்கிரஸ் சார்பில் இன்றும் நாடு முழுவதும் அமைதி வழியில் போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

"அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை திரும்பப்பெற வலியுறுத்தி இன்று தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகத்தில் அமர்வோம்.

இந்த திட்டம் குறித்து முதலில் இளைஞர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அதற்கு முன், அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறக் கோருவோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை டெல்லி போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் எம்.பி.க்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள், அமலாக்கத்துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை ஜனாதிபதியிடம் தெரிவிப்போம்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக உள்ள நிலையில், அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்