ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கத்தை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-26 21:12 GMT

பெங்களூரு:

தர்ணா போராட்டம்

நாடாளுமன்றத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலையொட்டி கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். நீரவ் மோடி மற்றும் மோடியின் பெயரில் உள்ள மேலும் சிலர் வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டிற்கு தப்பி சென்றது குறித்து ராகுல் காந்தி பிரதமரை அவதூறாக பேசியதாக பா.ஜனதா குற்றம்சாட்டியது.

இதுகுறித்த அவதூறு வழக்கில் குஜராத் கோர்ட்டு, ராகுல் காந்திக்கு எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது, அதாவது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தியது. கர்நாடக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து தர்ணா போராட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது.

பதாகைகளை ஏந்தியிருந்தனர்

மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கைகளில் பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

இதில் பேசிய தலைவா்கள், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக போராட வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் கூறினர். பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்