பா.ஜனதாவை வலுவாக எதிா்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே - ஜெய்ராம் ரமேஷ்

பா.ஜனதாவை வலுவாக எதிா்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-20 02:08 GMT

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என காங்கிரஸ் கருதுகிறது. காங்கிரஸ் இல்லாத எந்த எதிா்க்கட்சி கூட்டணியும் வெற்றி பெறாது. காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தால் மட்டுமே, எதிா்க்கட்சிகள் கூட்டணியும் வலுவாக இருக்கும்.

காங்கிரஸின் 'இந்திய ஒற்றுமை' நடைப்பயணம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிகாா் முதல்-மந்திரி நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா். எதிா்க்கட்சிகளை காங்கிரஸ் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவரது கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் எவரின் சான்றிதழும் காங்கிரசுக்குத் தேவையில்லை.

பாஜகவுடன் எந்தவித சமரசத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், வலுவாக எதிா்த்து வரும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. எந்தவித இரட்டை நிலைப்பாட்டையும் கொண்டிருக்காமல், பாஜகவை காங்கிரஸ் எதிா்க்கிறது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்