'ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது' - அசாம் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு அல்ல என்று அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-01-16 17:19 GMT

திஸ்பூர்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பை நிராகரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி அறிவித்தது.

இதனிடையே மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பா.ஜ.க.வின் அரசியல் நிகழ்வு என்று விமர்சித்தார். மேலும் வளர்ச்சி திட்டங்கள், மத நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பா.ஜ.க.வினர் தேர்தல் சாயம் பூசி வருவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், 'ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது' என்று அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ராகுல் காந்தி அரசியலாக்குகிறார். அது அரசியல் நிகழ்வு அல்ல, மத நிகழ்வு. அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டால், அதில் எந்த அரசியலும் இருக்காது. ஆனால் தற்போது இதை அரசியலாக்கியது யார்? ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் அதை அரசியலாக்குகின்றனர்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்