சாதி அரசியலுக்கு பெயர் பெற்ற மாவட்டம் சாம்ராஜ்நகர். இந்த மாவட்டத்தில் சாம்ராஜ்நகர், குண்டலுபேட்டை, ஹனூர், கொள்ளேகால் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் காங்கிரசும்,
பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. இங்கு லிங்காயத், பரி சிஸ்டரா சமுதாய மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இவர்கள் 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாக உள்ளனர். இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஜனதா பரிவார் மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டிகள் நிலவி வந்தன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நிலைமை மாறி வருகிறது.
சுமார் 20 ஆண்டுகளாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ராஜ்ஜியம் செய்து வந்த மகாதேவபிரசாத் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். காங்கிரசிடம் இருந்து தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதாவும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் முயற்சி செய்து வருகிறது. இந்த தேர்தலில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
குண்டலுபேட்டை
குண்டலுபேட்டை தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ், ஜனதா பரிவார், பா.ஜனதா கட்சிகளிடையே போட்டி நிலவுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன்ப வரை இங்கு பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதில்லை. ஆனால் கடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் நிரஞ்சன்குமார், வரலாற்றை மாற்றி எழுதினார். 3 முறை தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த நிரஞ்சன்குமார், கடந்த முறை வெற்றி பெற்று சட்டசபையில் கால் பதித்தார். இந்த முறையும் பா.ஜனதா சார்பில் அவர் களம் இறங்குவது ஏறக்குறையாக உறுதி.
காங்கிரசை பொறுத்தவரை மறைந்த முன்னாள் மந்திரி மகாதேவபிரசாத்துக்கு பிறகு பலமான வேட்பாளர் இல்லாமல் தவித்து வருகிறது. இந்த முறை குண்டலுபேட்டை தொகுதியை கைப்பற்ற தீவிர முயற்சியில் இறங்கி உள்ள காங்கிரஸ், மகாதேவபிரசாத்தின் மகன் கணேஷ் பிரசாத்துக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் இன்னும் வேட்பாளர் உறுதி செய்யப்படவில்லை.
கொள்ளேகால்
கொள்ளேகால் தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகள் செல்வாக்குடன் திகழ்கிறது. இந்த தொகுதியில் வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக பரிசிஸ்டரா சமுதாய வாக்குகள் திகழ்கிறது. இந்த தொகுதியில் எந்த கட்சி வேட்பாளரும் நிரந்தரமாக வெற்றிக்கொடி நாட்டியது இல்லை. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.), ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட என்.மகேஷ் வெற்றி பெற்றார். தற்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
இதனால் இந்த முறை அவர் பா.ஜனதா சார்பில் கொள்ளேகால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சி பலமான வேட்பாளரை தேடி வருகிறது.
சாம்ராஜ்நகர்
காங்கிரஸ், பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவும் தொகுதி இது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வான புட்டரங்கஷெட்டி காங்கிரஸ் சார்பில் வருகிற தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பா.ஜனதா சார்பில், கடந்த முறை தோல்வி அடைந்த மாவட்ட தலைவர் மல்லிகார்ஜுனப்பா மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் டிக்கெட் கேட்டு வருகிறார்கள். இதில் எடியூரப்பாவின் ஆதரவாளரான மல்லிகார்ஜுனப்பாவுக்கு பா.ஜனதா சார்பில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு அதிகம். இந்த தொகுதியில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், 3 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். வருகிற தேர்தலில் போட்டியிடுவேன் என்று வாட்டாள் நாகராஜ் ெதரிவித்துள்ளார். இதனால் அவரும் சாம்ராஜ்நகரில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. மேலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி பலமான வேட்பாளரை நிறுத்த தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
ஹனூர்
குடும்ப அரசியலுக்கு பெயர்ப்பெற்ற தொகுதி தான், ஹனூர். இந்த தொகுதியில் நீண்டகாலமாக முன்னாள் மந்திரிகள் ராஜுகவுடா, நாகப்பா ஆகியோரது குடும்பத்தினர் இடையே தான் போட்டி நிலவுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஆர்.நரேந்திரா. இவரே காங்கிரஸ் சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பரிமளா நாகப்பாவின் மகன் பிரீத்தம் நாகப்பா உள்ளிட்ட சிலர் டிக்கெட் கேட்டு வருகிறார்கள். ஆனால் கட்சி மேலிடம் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் மஞ்சுநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாம்ராஜ்நகர் தங்களின் கோட்டை என நிரூபிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த தேர்தலில் வெற்றி, தோல்வி நிலவரம்
தொகுதி வெற்றி தோல்வி
குண்டலுபேட்டை நிரஞ்சன்குமார்(பா.ஜ.க.).........94,151 மோகன்குமாரி(காங்.)..................77,467
சாம்ராஜ்நகர் புட்டரங்கஷெட்டி(காங்.)...........75,963 மல்லிகார்ஜுனப்பா(பா.ஜ.க.)......71,050
கொள்ளேகால் என்.மகேஷ்(பி.எஸ்.பி.)...........71,792 ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி(காங்.)....52,338
ஹனூர் ஆர்.நரேந்திரா(காங்.)..............60,444 பிரீத்தம் நாகப்பா(பா.ஜ.க.).........56,931