கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு நீடிக்காது-சி.டி.ரவி ஆரூடம்

கர்நடகத்தில் காங்கிரஸ் அரசு நீடிக்காது என்று பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி சி.டி.ரவி கூறினார்.;

Update: 2023-08-18 21:52 GMT

மைசூரு:-

கே.ஆர்.எஸ். அணை

பா.ஜனதாவின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் மந்திரியுமான சி.டி.ரவி நேற்று மைசூருவுக்கு வந்தார். அவர் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை நிரம்பியது. ஆனால் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கே.ஆர்.எஸ். அணை நிரம்ப முடியாமல் இயற்கையே சதி செய்துவிட்டது. கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இல்லாததால் தென்கர்நாடக மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சார பயன்பாடு

கட்டுக்கடங்காமல் மின்சார பயன்பாடு உள்ளது. இது சீராக இருக்க இன்னும் பல லட்சம் யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்படுவது அவசியம். ஆனால் தற்போது உள்ள நிலைமையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலையில் மாநில அரசு இருக்கிறது. இப்படி இருக்க மக்கள் எப்படித்தான் காங்கிரசை நம்பி வாக்களித்தார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்களே அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தேர்தலை சந்திப்போம்

இப்படி பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதால் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு நீடிக்காது. நான் எஸ்.டி.சோமசேகரிடம் பேசினேன். அவர் பா.ஜனதாவை விட்டு செல்லமாட்டேன் என்று உறுதிபட தெரிவித்து விட்டார். சட்டசபை தேர்தல் முடிந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. எங்கே தோல்வி ஏற்பட்டது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் செய்த தவறை மீண்டும் செய்யாமல் திருத்திக் கொள்வோம்.

நான் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவிக்கான போட்டியில் இல்லை. நான் கட்சியின் மேலிடம் சொல்லும் சொல்லுக்கு கட்டுப்படும் தீவிர தொண்டன். நான் ஒருவன் தான் கட்சி மேலிடத்தின் உத்தரவுப்படி மந்திரி பதவியை துறந்து கட்சியிலேயே நீடித்து வருகிறேன். எங்களது தவறுகளை சரி செய்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்