தலித்துகளுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை - அமித்ஷா
தலித்துகளுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று அமித்ஷா பேசினார்.;
திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. ஏற்பாட்டில் நேற்று நடந்த தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து காங்கிரஸ் மறைந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சி உலகில் இருந்து அழியும் நிலையில் உள்ளது. கேரளாவில் பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் எதிர்காலம் உள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியம் என்று பிரதமர் மோடி நம்புகிறார். நீண்ட காலம் ஆட்சியில் இருந்தும் தலித் சமூகத்தினருக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் எதையும் செய்ய வில்லை. அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது. நலிவடைந்த சமூகத்தினருக்கு செய்தது என்ன என்று காங்கிரசும், கம்யூனிஸ்டும் விளக்க தயாரா? காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததுவரை அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றிய பின்னர்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது தரப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.