காங்கிரசால் நல்ல விசயங்களை சகித்து கொள்ள முடியாது; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கண்டனம்
காங்கிரசால் நல்ல விசயங்களை சகித்து கொள்ள முடியாது என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்து உள்ளார்.;
புதுடெல்லி,
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அதனை புறக்கணித்தன. இதனை கைவிடும்படி, மத்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கவில்லை.
இதனால், எதிர்க்கட்சிகளுக்கு மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் இன்று கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நாட்டில் நல்ல விசயங்கள் நடக்கும்போது, காங்கிரசால் அதனை சகித்து கொள்ள முடியாது. அவர்கள் செங்கோல் பற்றி பொய் பேசுகின்றனர் என கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஒரு கோவிலாக உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு மக்கள் சரியான பதிலடி தருவார்கள் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, இந்திய வளர்ச்சியின் வழியே உலகத்தின் வளர்ச்சியை புதிய நாடாளுமன்ற சபை செயல்படுத்தும் என சுட்டி காட்டி பேசினார்.
இந்தியாவின் தீர்மானம், அதன் குடிமக்களின் வலிமை மற்றும் இந்தியாவில் மனித சக்தியின் வாழ்வு ஆகியவற்றை இந்த உலகம் மதிப்புடனும் மற்றும் நம்பிக்கையுடனும் உற்றுநோக்கி வருகிறது.
இந்தியா முன்னேறும்போது, இந்த உலகமும் முன்னேறுகிறது. புதிய பாதைகளை அமைப்பதன் வழியே மட்டுமே புதிய மாதிரிகளை நிறுவ முடியும் என்று அவர் குறிப்பிட்டார். புதிய இந்தியாவானது, புதிய இலக்குகளை உணர்ந்து, புதிய வழிகளை அமைத்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.