மாநில தலைநகரங்களில் 12-ந் தேதி போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12-ந் தேதி மவுன சத்தியாகிரக போராட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

Update: 2023-07-09 23:45 GMT

புதுடெல்லி, 

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12-ந் தேதி மவுன சத்தியாகிரக போராட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. சூரத் மாவட்ட கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை குஜராத் ஐகோர்ட்டும் சமீபத்தில் உறுதி செய்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை தகுதி நீக்குவதற்கு மத்திய பா.ஜனதா அரசு மோசமான தந்திரத்தை கையாண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு எதிராக ராகுல் காந்தி வலுவாக போராடி வருகிறார். இந்திய ஒற்றுமை பயணத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய வரலாற்று உரையில் மோடிக்கும்-அதானிக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தி இருந்தார்.

இதன் விளைவாக ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு பா.ஜனதா மோசமான தந்திரத்தை கையாண்டுள்ளது.

ஆனாலும் மனம் தளராத ராகுல் காந்தி, மத்திய அரசை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் மக்களின் குரலாகவும், மக்கள் நம்பும் தலைவராகவும் விளங்கி வருகிறார். இதனால் காங்கிரஸ் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் இந்த தவறான மற்றும் பழிவாங்கும் தகுதி நீக்கத்துக்கு எதிராக போராடி வருகிறது.

எந்த சார்பும் இல்லாமல், நீதி மற்றும் சுதந்திரத்தின் சக்தி களுடன் நிற்குமாறும், ஜனநாய கத்தின் இந்த முடக்குதலை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் 140 கோடி இந்தியர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணி வரை, ஒவ்வொரு மாநில தலைநகரிலும் உள்ள மகாத்மா காந்தி சிலைகள் அருகே காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் 'மவுன சத்தியாகிரகம்' நடத்துகின்றன.

நமக்கோ நமது தலைவர்களுக்கோ எதிராக பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். என்ன தந்திரங்களை கையாண்டாலும், உண்மையும், ஒவ்வொரு இந்தியனின் உண்மையான நலனுக்கான எங்கள் அர்ப்பணிப்பும் உரத்த குரலில் பேசும் என்று நாங்கள் நம்புகிறோம். இத்தகைய பாசிச சக்திகள் நீண்ட காலம் நீடிக்க இந்தியா அனுமதிக்காது.

இவ்வாறு கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்