நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும் ப.சிதம்பரம் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்ப்பதற்கு காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2023-02-21 04:23 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்குமா? என கேட்கப்பட்டது.

அதற்கு ப.சிதம்பரம் பதில் அளித்து கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது. அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பலத்தை கூட்டணிக்கு கொண்டுவருகிறது. காங்கிரசைத் தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநில கட்சிகள் என்பதை ஒப்புக்கொள்வதும் உண்டு.

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு காங்கிரசே மையமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பணிவுடனும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் அணுக வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அதிகம் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அதன் மாநில அளவிலான பார்வையை விட்டுவிட்டு, அகில இந்திய பார்வையை கொண்டிருக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர்களும், சரத்பவார், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி மற்றும் மு.க.ஸ்டாலின் போன்ற கூட்டணி கட்சி தலைவர்களும் புதிய கண்ணோட்டத்துடன் தேர்தலை அணுக அனைத்து கட்சிகளையும் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

இதைப்போல காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் குறித்தும் ப.சிதம்பரம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். குறிப்பாக உறுப்பினர்களில் பாதி பேர் தேர்தல் மூலம் நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த தேர்தலுக்கான வாக்காளர் விவகாரத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்த ப.சிதம்பரம், இந்த பிரச்சினைகள் அனைத்தும் கட்சியின் தேர்தல் கமிஷன் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் கட்சியின் அதிகாரம் மிக்க காரிய கமிட்டியில் இளம் தலைவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராய்ப்பூரில் 24-ந் தேதி தொடங்கும் நிலையில், காரிய கமிட்டி குறித்து ப.சிதம்பரம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்