மடாதிபதியின் பிறந்தநாளுக்கு பக்தர்கள் கூறிய வாழ்த்து வீடியோ உலக சாதனை

மடாதிபதியின் பிறந்தநாளுக்கு பக்தர்கள் கூறிய வாழ்த்து வீடியோ உலக சாதனை படைத்துள்ளது.

Update: 2022-06-10 21:46 GMT

பெங்களூரு: மைசூருவில் உள்ள அவதூட்ட தத்த பீடத்தின் பீடாதியும், கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தின் மடாதிபதியுமாக இருப்பவர் கணபதி சச்சிதானந்த சுவாமி. இவரது 80-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்பட நாடு முழுவதும் இருந்து பக்தர்களும், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதாவது அவருக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, மலையாளம், ஜப்பானியம், சுவிஸ், மராத்தி, அரபு, இத்தாலியன், மலாய், ஸ்பானிஷ், சர்னாமி, துருக்கி மொழிகளிலும், இசை வாத்திய கருவிகள் மூலமும் பக்தர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி வீடியோ வடிவில் அவருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.


இந்த வீடியோக்கள் மொழி நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, பிரமாண்ட வீடியோ தொகுப்பாக உருவாக்கப்பட்டது. அதாவது அனைத்து பக்தர்களும் கூறிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அடங்கிய வீடியோ பைட்டுகள் இணைக்கப்பட்டு நீண்ட வீடியோ வடிவமைக்கப்பட்டது. இந்த பிறந்தநாள் வாழ்த்து வீடியோ உலக சாதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி கணபதி சச்சிதானந்த சுவாமிக்கு பக்தர்கள் கூறிய பிறந்தநாள் வாழ்த்து வீடியோ உலக சாதனையாக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்தது. அதற்கான சான்றிதழை சுவாமியிடம், கின்னஸ் நிறுவன அமைப்பின் ருஷிநாத் நேற்று வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்