இரு தரப்பினர் இடையே மோதல்; 5 பேர் படுகாயம்
சிவமொக்காவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 போ் படுகாயமடைந்தனர். இதனால் வன்முறை ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;
சிவமொக்கா:-
இரு தரப்பினரிடையே மோதல்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை அடுத்த சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேவை சேர்ந்தவர்கள் ரிஸ்வான், ஜாகீர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ், கௌதம், அரவிந்த். இவர்கள் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜாகீர் மற்றும் ரிஸ்வான் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். தரிகெரே மெயின் ரோட்டில் வந்தபோது, அந்த வழியாக வந்த ஹரிஷ், கௌதம், அரவிந்த் ஆகியோர் 2 பேரையும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் அவர்கள் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
5 பேருக்கு காயம்
இது குறித்து ஹாலேநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 5 பேரையும் மீட்டு சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது இரு தரப்பை சேர்ந்தவர்களின் உறவினர்களும் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்த ரிஸ்வானின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. எனவே டாக்டர்கள் அவரை மீட்டு சிவமொக்கா மெக்கான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு ஆஸ்பத்திரி முன்பு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பிற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மோதல் நடந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.