பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதிஷ் குமார்?

பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றுக் கொண்டார்.

Update: 2024-02-12 03:17 GMT

பாட்னா,

பீகார் மாநில முதல்-மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தார். லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாக இருந்தார்.

திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பா.ஜனதாவுடன் இணைந்தார். இதனால் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றுக் கொண்டார்.

மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சூழலில், பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 

பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 121 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்