பெங்களூருவில் ராணுவ மந்திரிகள் மாநாடு; ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்தது

அமெரிக்கா, ரஷியா உள்பட 27 நாடுகளை சேர்ந்த மந்திரிகள், அதிகாரிகள் பங்கேற்ற ராணுவ மந்திரிகள் மாநாடு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடந்தது.

Update: 2023-02-14 20:54 GMT

பெங்களூரு:

ராணுவ மந்திரிகள் மாநாடு

14-வது சர்வதேச பெங்களூரு விமான கண்காட்சி தொடக்க விழா நேற்று முன்தினம் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட விமானவியல் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 112 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாளில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் போர் விமானங்கள் மெய்சிலிர்க்கும் வகையில் சாகசங்கள் புரிந்து தனது திறனை வெளிப்படுத்தின.

இந்த நிலையில் இந்த கண்காட்சியின் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில் ராணுவ மந்திரிகள் மாநாடு, இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்பட 27 நாடுகளின் ராணுவ மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

ஆழமான ஒத்துழைப்பு

இந்த விமான கண்காட்சி மாநாட்டின் பரந்த கருப்பொருள் 'மேம்படுத்தப்பட்ட ஈடுபாடுகளின் மூலம் பகிரப்பட்ட செழுமை' என்பதுதான். திறன் மேம்பாட்டிற்கான ஆழமான ஒத்துழைப்பை அதாவது கூட்டு முயற்சிகள், மேம்பாடு, உற்பத்தி மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்குதல், பயிற்சி, விண்வெளி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

புவிசார் அரசியல் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி இதுவரை இல்லாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. இத்தகைய வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் அல்லது காலநிலை ஆகியவற்றில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் உலகளாவிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

எந்த ஒரு பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கும். ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட இந்த உலகில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை தனிமைப்படுத்தி பார்க்க முடியாது. உச்சி மாநாடுகள், மாநாடுகள் மற்றும் இதர நிகழ்வுகளின்போது, பொதுவான, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக அனைத்து நாடுகளின் கவலைகளும் சரியான முறையில் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்தியா அனைத்து நாடுகளின், குறிப்பாக வளரும் நாடுகளின் மேம்பாட்டிற்காக இடைவிடாது பாடுபடுகிறது. புதிய யோசனைகளை ஏற்க இந்தியா எப்போதும் திறந்த மனநிலையுடன் இருக்கிறது. பல்வேறு எண்ணங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் போட்டி நம்மை உலகளாவிய சிந்தனை மையமாக மாற்றியுள்ளது. இவை நமது பண்டைய நெறிமுறைகள், பரஸ்பர நலனுக்கான ஒத்துழைப்பை நோக்கிச் செயல்படுவதற்கு வழிகாட்டுகிறது. ஆனால் வெறும் பரிவர்த்தனை அணுகுமுறை மட்டுமின்றி ஒருபடி மேலே சென்று மனிதகுலத்தை ஒரே குடும்பமாக இந்தியா அங்கீகரிக்கிறது.

ஒருங்கிணைப்பு தேவை

மேலும் உலகளாவிய அளவில் செழிப்பை ஏற்படுத்த அனைத்து நாடுகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுத வர்த்தகம், போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் போன்றவை உலகிற்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய யுக்திகளை வகுக்க வேண்டியது அவசியம்.

இத்தகைய பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதில் இந்தியா அனைத்து நாடுகளையும் சமமாகவே கருதுகிறது. அதனால் தான், ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிப்புற தீர்வுகளை திணிப்பதை நாங்கள் ஏற்பது இல்லை. எங்கள் நட்பு நாடுகளின் திறனை அதிகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். ராணுவ ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேறிய நாடுகள் உள்ளன. ஆனால் அந்த நாடுகள், உதவி தேவைப்படும் நாடுகளுக்கு பிரச்சினைகளை தீர்க்கும் உரிமையை வழங்குவது இல்லை.

தேசிய முன்னுரிமைகள்

இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்குகிறது. நாங்கள் தேசிய முன்னுரிமைகள் மற்றும் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு ஒத்துழைப்பை வழங்குகிறோம். நாங்கள் உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு, ஒன்றாக வளர்ந்து, அனைவருக்கும் வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்க விரும்புகிறோம். 'ஏரோ இந்தியா' மூலம், நீங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் வலுவான ராணுவ தளவாட உற்பத்திக்கான சுற்றுச்சூழலை அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்