கோர்ட்டு உத்தரவின் பேரில் அளவீடு பணிகள் நிறைவு; அரசு நிலங்கள் விரைவில் மீட்கப்படும்

கோர்ட்டு உத்தரவின் பேரில் அளவீடு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அரசு நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என நகரசபை தலைவர் வேணுகோபால் கூறினார்.

Update: 2022-06-05 15:05 GMT

சிக்கமகளூரு;

1 ஏக்கர் நிலம்

சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் அருகே பசவனஹள்ளி பகுதியில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1980-ம் ஆண்டு, அரசு சார்பில் 25 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை கோவில் நிர்வாகத்தினர் நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் நிர்வாகத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து அரசு வழங்கிய நிலத்துடன் சேர்த்து கூடுதலாக 1 ஏக்கர் அளவிற்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும், அதில் மேற்கூரை அமைத்து சட்டவிரோதமாக சிலர் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து நகரசபை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அவர்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் முடிவு எடுத்தனர். மேலும், ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றுவதற்கு அனுமதி பெற நகரசபை, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

கோர்ட்டு மறுஉத்தரவு

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை கோர்ட்டு உத்தரவின் பேரில் நகரசபை தலைவர் வேணுகோபால் மற்றும் நகரசபை கமிஷனர் பசவராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களை அளவிடும் பணியை மேற்கொண்டனர். மேலும் அதுகுறித்த தகவல்களையும் பெற்று கொண்டனர். இதுகுறித்து நகரசபை தலைவர் வேணுகோபால் கூறியதாவது:-

நகரசபைக்குட்பட்ட பகுதியில் கோவிலுக்கு அரசு வழங்கிய நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர். அந்த நிலங்களை மீட்க கோர்ட்டு உத்தரவின்பேரில் அளவீடு பணிகள் நிறைவடைந்தன.

கோர்ட்டின் மறுஉத்தரவுக்கு பின் அந்த நிலங்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மீட்பு பணியின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

குப்பை கழிவுகள்

இதையடுத்து சிக்கமகளூரு நகரசபை கமிஷனர் பசவராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சிக்கமகளூரு அருகே இந்தாவாரா கிராமத்தில் குப்பை கழிவுகள் தரம்பிரிக்கும் மையம் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பை கழிவுகளை தரம்பிரிக்க போதிய வசதி இல்லாததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் குப்பை கழிவுகளை தரம்பார்க்க வசதியாக கிராமத்தில் புறநகர் பகுதியில் 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிலத்தை எனது தலைமையில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்