நவம்பர் 8-ந் தேதி முழு சந்திர கிரகணம் - இந்தியாவில் பார்க்கலாம்

நவம்பர் 8-ந் தேதி நிகழும் முழு சந்திர கிரகண நிகழ்வை இந்தியாவில் பார்க்க முடியும்.

Update: 2022-10-31 00:34 GMT

கொல்கத்தா,

உலகின் பல பகுதிகளில் கடந்த 25-ந் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் இதைப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நவம்பர் மாதம் 8-ந் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

8-ந் தேதி நிகழ உள்ள முழு சந்திர கிரகணத்தை கொல்கத்தாவிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் பார்க்க முடியும். இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷியாவின் குறிப்பிட்ட பகுதிகள், வட-தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் பார்க்க முடியும்.

இதுபற்றி பிரபல வான் இயற்பியல் நிபுணர் தேவி பிரசாத் துவாரி மேலும் கூறியதாவது:-

"சந்திர கிரகணம் எல்லா இடங்களில் இருந்தும் தெரியாது. கிரகணத்தின் பகுதி கட்டத்தின் ஆரம்பம், லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளில் தெரியும். நவம்பர் 8-ந் தேதி சந்திரனின் பகுதி கிரகணம் மதியம் சுமார் 2.30 மணிக்கு தொடங்கும். 3.46 மணிக்கு முழு கிரகண நிலையை அடையும். சந்திரனின் இருளைப் பொறுத்தமட்டில், அதிகபட்சமாக 4.29 மணி நேரத்தில் இருக்கும். முழு சந்திர கிரகணம் 5.11 மணிக்கு முடியும். இறுதியாக பகுதி கிரகணம் 6.19 மணிக்கு முடிவு அடையும்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் இருந்து கிரகணம் தெரியும், ஆனால் ஆரம்ப கட்ட பகுதி மற்றும் முழு கிரகணம் இரண்டும் தெரியாது. ஏனெனில் இரண்டு நிகழ்வுகளும் இந்தியாவில் எல்லா இடங்களிலும் அடிவானத்திற்கு கீழே இருக்கும் போது தொடங்கும்.

கொல்கத்தா உள்பட நாட்டின் கிழக்கு பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். எஞ்சிய பகுதிகளில், கிரகணத்தின் பகுதியின் முன்னேற்றத்தை மட்டுமே பார்க்க முடியும். இது 6.19 மணிக்கு முடியும்.

கொல்கத்தாவில் சந்திரன், கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகி, 4.54 மணிக்கு முழுமையாக தெரியும். எனவே, 5.11 மணி வரை இது முழு சந்திர கிரகணமாக இருக்கும், அதன் பிறகு சந்திரன் பகுதி கிரகண கட்டத்தில் நுழையும் மற்றும் நேரம் முன்னேறும்போது மேலும் ஒளிரும். அடுத்த முழு சந்திர கிரகணம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தான் நிகழும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்