போலீஸ் நிலையத்துக்கு ஒதுக்கிய நிலத்தை அளவீடு செய்யும் பணி தொடக்கம்
போலீஸ் நிலையங்களுக்கு ஒதுக்கீய நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது.
மங்களூரு:-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பனேமங்களூரு பழைய பாலம் அருகே போக்குவரத்து போலீசாருக்கு புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆனபின்பும் அங்கு கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 38 சென்ட் நிலத்தை 23 சென்ட் நிலம் மட்டுமே தற்போது காலிமனையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடத்திய விசாரணையில் போலீஸ் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 15 செண்ட் நிலத்தை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தது தெரிந்தது.
மேலும், இந்த நிலத்தில் சிலர் குடிசைகள் அமைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிலத்தை மீட்டுதர வருவாய் துறை அதிகாரிகளிடம் போக்குவரத்து போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்யும் பணியை தாசில்தார் உள்பட வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் அவர்கள் தொடங்கி உள்ளனர். ஆய்வின்போது போக்குவரத்து போலீசாரும் உடன் இருந்தனர்.