பெங்களூருவில் கல்லூரி மாணவர் குத்தி கொலை
பெங்களூருவில் கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.;
பெங்களூரு:
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி அருகே வசித்து வந்தவர் அர்பாஷ் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-வது ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் கல்லூரியில் இருந்த அர்பாசை சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். உடனே அவர் கல்லூரியில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் கல்லூரி அருகே வைத்து அர்பாசை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். தகவல் அறிந்ததும் கே.ஜி.ஹள்ளி போலீசார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது நேற்று முன்தினம் அந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடந்ததும், அந்த சந்தர்ப்பத்தில் அர்பாஷ் மற்றும் சில மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இந்த விவகாரம் காரணமாக அர்பாஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.