நேத்ராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

புத்தூரில் நேத்ராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவர் மீன்பிடிக்க ஆற்றுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-05-01 18:45 GMT

மங்களூரு-

புத்தூரில் நேத்ராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவர் மீன்பிடிக்க ஆற்றுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கல்லூரி மாணவர்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடி அருகே பெலத்ரோடி மனே பகுதியை சேர்ந்த ஒடியப்பா என்பவரின் மகன் சேர்ந்தவர் ரூபேஷ் (வயது 17). இவர், உப்பினங்கடியில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி விடுமுறை என்பதால் ரூபேஷ், கட்டேச்சரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இதையடுத்து ரூபேஷ் மற்றும் உறவினர் அகிலேஷ் ஆகியோர் அந்தப்பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆற்றில் மீன்பிடிக்க சென்றனர்.

ஆற்றில் மூழ்கி சாவு

அப்போது அவர்கள் 2 பேரும் ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ரூபேஷ் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் தண்ணீரில் மூழ்கி ரூபேஷ் தத்தளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அகிலேஷ் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அதற்குள் தண்ணீரில் மூழ்கி ரூபேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து உடனடியாக உப்பினங்கடி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ரூபேசின் உடலை மீட்டனர்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து போலீசார் ரூபேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்