ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகம்; உத்தரவில் தலையிட மும்பை ஐகோர்ட்டு மறுப்பு

ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவில் தலையிட முடியாது என மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2024-06-26 15:22 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் மத அடையாளத்திற்கு தொடர்புடைய ஹிஜாப், நகாப், புர்கா, தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சம்பந்தப்பட்ட கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

பின்னர் இது தொடர்பாக மும்பை பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணை வேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் மாணவிகள் மனு அளித்தும் பதில் கிடைக்காததால், சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படித்து வரும் 9 மாணவிகள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.எஸ்.சந்துர்கர் மற்றும் நீதிபதி ராஜேஷ் பட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவானது தங்கள் அடிப்படை மத உரிமைகள் மற்றும் தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக இருப்பதாக வாதிடப்பட்டது. மேலும் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் இன்றியமையாத அங்கம் என்பதற்கு சான்றாக குரானில் இருந்து சில வசனங்களை நீதிபதிகள் முன்பு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அல்தாப் கான் சமர்ப்பித்தார்.

அதே சமயம் கல்லூரி நிர்வாகம் தரப்பில், கல்லூரி வளாகத்தில் ஹிஜாப், நகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அணிய தடை விதித்திருப்பது சீருடை குறியீட்டிற்கான ஒரு ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே என்றும், அது முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவு அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் கல்லூரி நிர்வாகத்தின் தரப்பு வழக்கறிஞர் அணில் அந்துர்கர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று கூறி, மாணவிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்