கூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது
சித்தராமையா, டி.கே சிவகுமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்று முன்னாள் மந்திரி அசோக் சொல்கிறார்
பெங்களூரு:-
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முன்னாள் மந்திரி அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளை எச்சரிக்கும் விதமாக டி.கே.சிவக்குமார் பேசி இருக்கிறார். அது பகிரங்கமாக வெளியாகி உள்ளது. முதல் கூட்டத்திலேயே போலீஸ் அதிகாரிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு செயல்பட்டீர்கள், போலீஸ் துறையை காவி மயமாக்க முயற்சிக்கிறீர்கள் என்றும், இது நமது ஆட்சியில் நடக்காது, ஒன்று செய்ய முடியாது என எச்சரிப்பது போல் டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் போலீஸ் அதிகாரிகள் மாறுவதில்லை. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இரவு, பகலாக போலீசார் உழைக்கின்றனர். அப்படி இருக்கையில் டி.கே.சிவக்குமார் பேசி இருப்பது, ரவுடித்தனம் என்றால் காங்கிரஸ் என்பது தெளிவாகி உள்ளது. தற்போது முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு கொள்வது தொடர்பாக மோதிக் கொள்கிறார்கள். இது உண்மையான காங்கிரஸ் ஆட்சி இல்லை. இது சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் கூட்டணி ஆட்சியாகும். முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் இந்த கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது. நான் துணை முதல்-மந்திரியாக இருந்த அனுபவம் உள்ளது. அதன்மூலம் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
....