அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நிலக்கரித்துறை தயார் - பிரல்ஹாத் ஜோஷி

அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நிலக்கரித்துறை தயார் நிலையில் இருப்பதாக மத்திய மந்திரி பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-07 03:05 GMT

புதுடெல்லி,

அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நிலக்கரித்துறை தயார் நிலையில் இருப்பதாக மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பருவமழை காலத்திலும் நிலக்கரிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் அவர் உறுதிபடக் கூறினார்.

நிலையான எரிசக்தி- பாதுகாப்பிற்கான பாதையில் நிலத்தடி நிலக்கரி சுரங்கம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் கோல் இந்தியா நிறுவனத்தின் சார்பில் புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக கோல் இந்தியா நிறுவனம் முன்னேற வேண்டும் என்றார்.

மேலும், நிலக்கரி உற்பத்தியில் படைக்கப்பட்டு வரும் சாதனைகள் நிலக்கரித் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதற்கான பணிகளை உறுதி செய்வதாக குறிப்பிட்ட அவர், உற்பத்தியை பெருக்குவதைக் காட்டிலும், நிலக்கரி சுரங்கங்களின் பாதுகாப்பிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.

உலக நாடுகளின் பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும்போது இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. அண்மைக் காலமாக இந்தியாவின் நன்மதிப்பு உலகளவில் உயர்ந்துள்ளது.

வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்கப்பணிகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டிய அவர், 87 நிலக்கரி பிரிவுகள் ஏலத்தில் பங்கெடுத்திருப்பதுடன், அவற்றில் சில ஏற்கனவே உற்பத்தியை தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.

நிலத்தடி சுரங்கங்கள் வாயிலாக நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான புதிய உத்திகள், நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் மந்திரி பிரல்ஹாத் ஜோஷி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்