டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்கத்துறையின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.;

Update: 2024-03-18 05:45 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது.

இதில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.

இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில் மார்ச் 16-ம் தேதி ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 16ம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்னொரு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த ஒப்பந்தம் தொடர்பாக நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த மாதம், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. என்.டி.குப்தா, டெல்லி குடிநீர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஷாலப் குமார், பட்டய கணக்காளர் பங்கஜ் மங்கல் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக 18-ம் தேதி (இன்று) டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. கோர்ட்டில் இருந்து ஜாமீன் பெற்ற பின்னரும், அமலாக்கத்துறை ஏன் மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புகிறது? அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்