மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல்

மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-11 15:21 GMT

மங்களூரு;

வீர் சாவர்க்கர் படம்

தட்சிண கன்னடா மாவட்டம் ஹம்பன்கட்டா பகுதியில் மங்களூரு பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக கல்லூரி அரசுக்கு சொந்தமானதாகும். இந்த பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சில மாணவர்கள் தங்களது வகுப்பறையில் வீர் சாவர்க்கர் மற்றும் பாரத மாதாவின் புகைப்படங்களை வைத்தனர்.


அதற்கு மற்றொரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த கல்லூரி முதல்வர் அனுசுயா ராய், பிரச்சினைக்கு காரணமான வீர் சாவர்க்கர் மற்றும் பாரத மாதாவின் புகைப்படங்களை அகற்றினார். இதற்கிடையே மாணவர்கள் வகுப்பறையில் வீர் சாவர்க்கர் மற்றும் பாரத மாதாவின் புகைப்படங்களை வைப்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


மாணவர்கள் மோதல்

இதையடுத்து இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் இதுதொடர்பாக இருதரப்பு மாணவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பு மாணவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரச்சினைக்கு காரணமான மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்றொரு தரப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்றனர். இந்த மோதல் சம்பவம் குறித்து இருதரப்பு மாணவர்களும் மங்களூரு தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பு மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

போலீஸ் குவிப்பு

பின்னர் போலீசாரும், கல்லூரி நிர்வாகிகளும் சேர்ந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுபற்றி கல்லூரி முதல்வர் அனுசுயா ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 'மோதலுக்கு காரணமான மாணவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணை முடிந்ததும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்