ராஜஸ்தானில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
ராஜஸ்தானின் கோட்டாவில் கடந்த 8 மாதங்களில் 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஹனுமன்கர்,
ராஜஸ்தானின் ஹனுமன்கரில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த பிரியங்கா என்ற பெண் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
பிரியங்கா கடந்த ஜூன் மாதம் முதல் ஹனுமன்கரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அதற்காக ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறிப்பு ஒன்றை கைப்பற்றிய போலீசார், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானின் கோட்டாவில் கடந்த 8 மாதங்களில் 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ராஜஸ்தானில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாநில அரசு எச்சரிக்கை விடுத்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், மாணவர்களின் தற்கொலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க குழு ஒன்றை அமைத்தார்.
முன்னதாக, மாணவர்களின் தற்கொலைகள் குறித்த தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவைக் குறிப்பிட்ட அசோக் கெலாட், "என்.சி.ஆர்.பியின்படி, 2021 ஆம் ஆண்டில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,834 பேர், மத்தியப் பிரதேசத்தில் 1,308 பேர், தமிழ்நாட்டில் 1,246 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 855 மற்றும் ஒடிசாவில் 834 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. கூட்டு முயற்சியால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்" என்று கூறியிருந்தார்.