குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது - பினராயி விஜயன் திட்டவட்டம்
4 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.;
திருவனந்தபுரம்,
குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுகிறோம். இந்த வகுப்புவாதத்தை பிளவுபடுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லா சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர். பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.