மண்டியாவில் மழை வேண்டி சிறுவன்-சிறுமிக்கு திருமணம்

மண்டியாவில் மழை வேண்டி சிறுவன்-சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2023-09-16 21:08 GMT

மண்டியா:

கர்நாடக மாநிலம் மண்டியாவில் கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதையடுத்து ஜூலை மாதம் மழை பெய்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. தற்போது நீர்பாசனத்திற்கு தண்ணீர் இருந்தாலும், வரும் நாட்களில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று விவசாயிகள் அஞ்சி வருகின்றனர். மேலும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் மழை வேண்டி விவசாயிகள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.

அதன்படி மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா பெட்டதமல்லேனஹள்ளி கிராமத்தில் நேற்று மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் உச்சம்மா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். 15 நாட்கள் இந்த வழிபாடு நடத்த திட்டமிட்டனர். அதன்படி 14 நாட்கள் உச்சம்மா கோவில் வளாகத்தில் சிறப்பு வழிபாடு செய்து வந்தனர். இறுதி நாளான நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மழை வேண்டி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தப்பட்டது.

இதில் அந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகளை பெற்றோர் மணமகன், மணமகள் வேடமிட்டு, கோவில் வளாகத்தில் அமர வைத்து சிறப்பு பூஜை செய்து, சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். அவ்வாறு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். அதனை கருத்தில் கொண்டு அந்த கிராம மக்கள் இந்த சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். இந்த குழந்தை திருமண நிகழ்ச்சி பக்தர்களின் பக்தி மற்றும் நம்பிக்கையை வெளிகாட்டும் வகையாக அமைந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்