ஜகலூர் தாலுகா ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது குழந்தை சாவு
ஜகலூர் தாலுகா ஆஸ்பத்திரியில், பிரசவத்தின்போது குழந்தை இறந்ததற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு உள்ளனர்.;
சிக்கமகளூரு;
நிறைமாத கா்ப்பிணி...
தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா அனுமந்தபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் நேத்ரா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதில் வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஜகலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை நேத்ராவை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக கூறினர். மேலும், தாய் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தையை அறுவை சிசிக்சை செய்து வெளியே எடுத்தனர்.
இந்த நிலையில் டாக்டர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும், அதனை டாக்டர்கள் மூடிமறைப்பதாகவும் கூறி பெண்ணின் குடும்பத்தினர் உள்பட பலர் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்களை கைது செய்ய வேண்டும் என கூறி முழக்கமிட்டனர்.
வழக்குப்பதிவு
இதற்கிடையே போராட்டம் குறித்து ஜகலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணின் உறவினர்கள், குழந்தை கடந்த வாரம் வரை நலமுடன் இருந்ததாகவும், டாக்டர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறினர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.