முதல்-மந்திரியின் சாம்ராஜ்நகர் பயணம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) சாம்ராஜ்நகருக்கு வர இருந்த நிலையில், அவரது பயணம் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) வர உள்ளார்.;

Update: 2022-12-11 19:20 GMT

கொள்ளேகால்:-

சாம்ராஜ்நகர் பயணம் தள்ளிவைப்பு

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) சாம்ராஜ்நகரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொள்ளும் விழாக்களின் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சாம்ராஜ்நகர் சுற்றுப்பயணம் திடீரென்று ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாம்ராஜ்நகர் வர இருந்த நிலையில், அந்த பயணம் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) வர உள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி விவரம்

நாளை காலை 10.30 மணிக்கு சாம்ராஜ்நகருக்கு வரும் பசவராஜ் பொம்மை, சாம்ராஜ்நகர், குண்டலுபேட்டை தொகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மதியம் 1 மணிக்கு கொள்ளேகாலில் அம்பேத்கர் பவனில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளில் கலந்துகொள்கிறார். பின்னர் மதியம் 2.50 மணிக்கு மலை மாதேஸ்வரா கோவிலுக்கு செல்லும் அவர், அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மதியம் 3.15 மணி அளவில் மலை மாதேஸ்வரா கோவில் நாகமலை பவனில் அதிகாரிகளுடன் கோவில் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

சாம்ராஜ்நகரில் கடந்த 2 நாட்களாக சீரற்ற வானிலை நிலவுவதால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹெலிகாப்டரில் வர கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அவர் ஹெலிகாப்டரில் வருகிறாரா அல்லது கார் மூலம் வருகிறாரா என்பது பற்றி உறுதியான தகவல் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்