கர்நாடகத்தில், மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி உத்தரவு

கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு மேலும் 5 நாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-08 22:15 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு மேலும் 5 நாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ருத்ரதாண்டவமாட தொடங்கி உள்ளது. மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா மற்றும் வடகர்நாடக மாவட்டங்களான ஹாவேரி, பாகல்கோட்டை, பீதர், பெலகாவி, கலபுரகி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது.

மேலும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த மழை வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்தது

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கோர மழை பெய்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கண்ணூர் அருகே பல்லூர்குட்டே பகுதியில் உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்தப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது விழுந்தது. இதனால் அந்த 2 வீடுகளும் மண்ணுக்கடியில் சிக்கி இடிந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

தட்சிண கன்னடாவில் உள்ள குமாரதாரா, நேத்ராவதி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் உடுப்பியில் பலத்த மழை காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சவுபர்ணிகா ஆற்றில் கடும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குந்தாப்புரா அருகே சேனாபுரா உள்ளிட்ட சில கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அந்தப்பகுதியில் 7 முதல் 8 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.உத்தரகன்னடா மாவட்டத்தை பொறுத்தவரை கார்வார், எல்லாப்புரா பகுதிகளில் இடைவிடாது தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

ஆறுகளில் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குடகு மாவட்டத்திலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப்பகுதிகளில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாகமண்டலா, தலைக்காவிரி பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தலைக்காவிரியில் பெய்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சிக்கமகளூரு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அங்குள்ள ஹேமாவதி, துங்கா, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மேலும் சிவமொக்கா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் லிங்கனமக்கி, துங்கா, பத்ரா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜோக் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழை வெள்ளத்தால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதேபோல், ஹாசனில் உள்ள ஹேமாவதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஹாசன் மாவட்டத்தில் தொடர் கனமழையால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

வடகர்நாடக மாவட்டங்களான ஹாவேரி, தார்வார், பெலகாவி, கலபுரகி, பீதர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் ெபய்து வரும் தொடர் கனமழையால் அங்குள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இங்கு பாயும் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகல்கோட்டையில் உள்ள அலமட்டி அணைக்கும், விஜயாப்புராவில் உள்ள துங்கபத்ரா அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.அலமட்டி அணைக்கு வினாடிக்கு 75,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சிக்கோடி தாலுகாவில் மஞ்சாரி, எரகூரு உள்ளிட்ட சில கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் கிருஷ்ணா ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை ரூ.50 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 250 ஹெக்டேர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. 92 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் 2 பாலங்கள் சேதமடைந்துள்ளது.

'ரெட் அலர்ட்'

தென்மேற்கு பருவமழை கோர முகத்தை காட்டி வரும் நிலையில், இன்னும் 5 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் வருகிற 20-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கையும், ஹாவேரி, தார்வார், பெலகாவி, கலபுரகி, பீதர் மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, குடகு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (சனிக்கிழமை) வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பசவராஜ் பொம்மை ஆலோசனை

இந்த நிலையில், மழை பாதிப்பு குறித்து பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று மழை பாதித்த மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நிவாரண பணிகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம், மாவட்ட கலெக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு தேவையான நிதி மற்றும் பிற உதவிகளை செய்து கெடுக்க அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

மேலும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள், பிற அதிகாரிகள் கண்டிப்பாக நேரில் சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சத்தை வழங்க வேண்டும் என்றும் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

12 பேர் பலி

கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-கர்நாடகத்தில் கனமழையால் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 13 மாவட்டங்களில் 17 தாலுகாக்களில் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் கனமழைக்கு கடந்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். 66 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.735 கோடி ஒதுக்கப்பட்டு, கலெக்டர்களின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்னும் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், தற்போது அதிகளவு மழை பெய்து வருவதால், பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தலா ரூ.10 ஆயிரம்

அண்டை மாநிலமான மராட்டியத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக அந்த மாநில அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு இங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் இதுவரை மழை மற்றும் வெள்ளத்தால் 450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 90 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீடு சேதமடைந்தவர்களுக்கும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். வீடுகள் சேதம் குறித்து ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஏ, பி மற்றும் சி பிரிவுகளின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். மழை நின்றவுடன் பயிர் சேதம், சாலைகள் சேதம் குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். கடலோர மாவட்டங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்