முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் - இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு

சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இன்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-11-03 00:54 GMT

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்திமோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்குகிற முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் (வயது 47) தனக்குத்தானே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம், அவரது பதவிக்கே வேட்டு வைக்கிற நிலை உள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி, அவரது எம்.எல்.ஏ., பதவியை பறிப்பதற்கு பரிந்துரை செய்து மாநில கவர்னர் ரமேஸ் பயசுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி கடிதம் எழுதியது. தேர்தல் கமிஷன் பரிந்துரையை பெற்று, இரண்டாவது கருத்தினைப் பெறக்காத்திருப்பதாக கவர்னர் ரமேஷ் பயஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ரூ.1,000 கோடி மதிப்பிலான சட்ட விரோத சுரங்கம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஷ்ரா மற்றும் பச்சுயாதவ், பிரேம் பிரகாஷ் சிக்கி உள்ளனர்.

இதில் நடந்துள்ளதாக கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி சாகிப்கஞ்ச், பாரஹைட், ராஜ்மகால், மிர்சா சாகி, பர்ஹர்வா என ஜார்கண்டில் உள்ள பல இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினார்கள். இந்த வழக்கில் பங்கஜ் மிஷ்ரா உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹேமந்த் சோரன் மீதும் மத்திய அமலாக்கத்துறையின் கழுகுப்பார்வை விழுந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்துவது என முடிவு செய்துள்ளது. இதற்காக அவர் 3-ந் தேதி (இன்று) ராஞ்சியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பேரில் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஹேமந்த் சோரன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜார்கண்ட் மாநில அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்