கர்நாடகத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம்: கலெக்டர்களுடன் முதல்-மந்திரி ஆலோசனை

கர்நாடகத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மழை பாதித்த மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மீட்பு, நிவாரண பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

Update: 2022-08-28 21:32 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மழை பாதித்த மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மீட்பு, நிவாரண பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

பெங்களூருவிலும் மழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஜூன் மாதத்தில் மழை குறைவாக பெய்தாலும், அடுத்த வந்த ஜூலையில் மழை வெளுத்து வாங்கியது. குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. வட கர்நாடகத்திலும் அதிகளவில் மழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. தலைநகர் பெங்களூருவிலும் மழை கொட்டியது.

இந்த நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்திலும் நல்ல மழை பெய்தது. ஒரு வாரத்திற்கு பிறகு மழை குறைந்து வழக்கமான வானிலை நிலவியது. இந்த நிலையில் கடந்த 4, 5 நாட்களாக மீண்டும் மழை தனது ஆட்டத்தை காட்ட தொடங்கியுள்ளது. பெங்களூரு, ஹாசன், மைசூரு, மண்டியா, துமகூரு, கோலார், பெலகாவி, தட்சிணகன்னடா, ஹாவேரி, யாதகிரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தட்சிண கன்னடாவில் 170 மில்லி மீட்டரும், சுப்பிரமணியாவில் 140 மில்லி மீட்டர், துமகூரு மாவட்டம் மதுகிரி, ஹாவேரி மாவட்டம் குட்டாவில் தலா 110 மில்லி மீட்டர், யாதகிரி, கோலார், பெலகாவி, பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலைய பகுதிகளில் தலா 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பயிர்கள் நாசம்

யாதகிரி, ராய்ச்சூரில் கனமழை பெய்ததால் அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த பருத்தி செடிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ராமநகர், சிக்பள்ளாப்பூர், மைசூரு, சித்ரதுர்கா, மண்டியா, பெங்களூரு, பெங்களூரு புறநகர், உடுப்பி, கொப்பல், பெலகாவி, தாவணகெரே, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. விவசாய வயல்வெளிகளில் நீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் நாசம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநகர் மாவட்ட சன்னபட்டணா தாலுகாவில் உள்ள திட்டமாரனஹள்ளியில் உள்ள பெரிய ஏரி உடைந்து அதில் இருந்து நீர் வெளியேறி வயல்வெளிகளில் புகுந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணம் வழங்க வேண்டும்

அதே தாலுகாவில் கன்வா அணையில் இருந்து அதிகளவில் நீர் திறந்துவிடப்பட்டதால் அந்த நீர் விவசாய வயல்வெளிகளில் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்தூர் கிராமத்திற்கு தொடர்பு ஏற்படுத்தும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு மடமும் நீரில் மூழ்கிவிட்டது. அர்க்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சீரஹள்ளி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மைசூரு மாவட்டம் ஜெயபுரா கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் அதிகளவில் வெளியேறுகிறது. அந்த நீர் செல்லும் கால்வாயை தாண்டி செல்ல முயற்சி செய்த நபர் ஒருவரை வெள்ளம் அடித்து சென்றது. அவர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை பெய்யும்

இதற்கிடையே கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பெங்களூருவை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கலெக்டர்களுடன் ஆலோசனை

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி ஹாசன், மைசூரு, ராமநகர், ஹாவேரி, யாதகிரி, ராய்ச்சூர் குடகு, பெலகாவி, தட்சிணகன்னடா உள்ளிட்ட மழை பாதித்த மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பசவராஜ் பொம்மை, வெள்ள சேதங்கள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் தங்கள் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை வழங்கினார். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பராமரிப்பு பணிகள்

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அதனால் அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஏரிகள் உடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆய்வு மேற்கொண்டு தேவைப்படும் இடத்தில் ஏரிகளில் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பெரிய ஏரிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறப்புகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மைசூரு நெடுஞ்சாலையில் சில இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட்டு சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள மைசூரு, ராமநகர், மண்டியா கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதம் அடைந்த பாலங்கள் மற்றும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மக்களுக்கு தொந்தரவு

பொதுப்பணி மற்றும் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறைகள் இணைந்து பணியாற்றி சேதம் அடைந்த சாலைகளை சரிசெய்ய வேண்டும். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டால் அதை உடடினயாக சரிசெய்து மக்களுக்கு தொந்ததரவு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும். உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு வழங்க வேண்டும். விவசாய பயிர்கள் நாசம் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அதுபோல் மீட்பு பணிகளையும் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் கூட்டுறவு மந்திரி எஸ்.டி.சோமசேகர், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், உணவுத்துறை மந்திரி உமேஷ்கட்டி, தலைமை செயலாளர் வந்திதா சர்மா, முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்