கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு திடீர் ரத்து
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.;
பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரியாக பணியாற்றிய எடியூரப்பா வயது மூப்பு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்து இன்று(வியாழக்கிழமை) 2-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். இதையொட்டி இன்று காலை பசவராஜ் பொம்மையின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு தொட்டப்பள்ளாபுராவில் நடக்க இருந்தது.
பெங்களூருவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொட்டபள்ளாப்புராவில் இந்த மாநாட்டுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக மாநாட்டில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பா.ஜனதாவின் ஓராண்டு சாதனை விளக்க மாநாட்டிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைதொடர்ந்து தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே உள்ள நெட்டார் கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகரான பிரவீன் நெட்டார், மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இந்த கொலை சம்பவத்தால் கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர்கள் சிலர், இந்து அமைப்பினர் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் அவர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் பா.ஜனதாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் இன்று நடக்க இருந்த ஓராண்டு சாதனை விளக்க மாநாடு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நள்ளிரவில் நிருபர்களுக்கு பேட்டியளித்து தெரிவித்துள்ளார்.
===================================