முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ரூ.52.12 கோடி சொத்து
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ரூ.52.12 கோடி சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா சார்பில் சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் சிக்காவி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை வெளியிட்டு இருந்தார். பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ.49.70 கோடி சொத்து இருப்பதாக பசவராஜ் பொம்மை கூறி உள்ளார். ரூ.5.98 கோடிக்கு அசையும் சொத்துகளும், ரூ.1.57 கோடிக்கு தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பசவராஜ் பொம்மையின் மனைவி சென்னம்மா பெயரில் ரூ.1.14 கோடி, மகள் அதிதி பெயரில் ரூ.1.12 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது மகன் பரத் பொம்மைக்கு ரூ.14.74 லட்சம் கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தனது மகன் பெயரிலான சொத்துக்களை இதில் குறிப்பிடவில்லை.
மேலும் தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.42.15 கோடிக்கும், ரூ.19.2 கோடிக்கு குடும்ப சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரூ.5.79 கோடி கடன் இருப்பதாகவும், மொத்தத்தில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் சேர்த்து ரூ.52.12 கோடி சொத்து இருப்பதாக பசவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி கடந்த ஆண்டு(2022) மார்ச் மாதம் 26-ந் தேதி தார்வார் மாவட்ட உப்பள்ளி தாலுகா தாரிஹாலா கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் அவர் தெரிவித்துள்ளார்.