முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று சிக்கமகளூரு வருகை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) சிக்கமகளூருவுக்கு வர உள்ளார். அவர் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சிக்கமகளூரு:-
பசவராஜ் பொம்மை இன்று வருகை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சிக்கமகளூருவுக்கு வருகிறார். பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடூருக்கு வருகிறார். இதற்காக கடூரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. கடூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் வளாகத்தில் நடக்கும் ஜனசங்கல்ப யாத்திரை கூட்டத்தில் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பேச உள்ளார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தரிகெரேக்கு செல்கிறார். அங்கு அம்பேத்கர் சிலையை பசவராஜ் பொம்மை திறந்து வைக்க உள்ளார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
பின்னர் அஜ்ஜாம்புரா, கடூர் பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான திட்டத்தையும் பசவராஜ் பொம்மை தொடங்கி உள்ளார். தரிகெரே தாலுகாவில் ரூ.8 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை தொடங்கிவைக்கிறார். மேலும் சிக்கமகளூருவில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பெல்லி பிரகாஷ் எம்.எல்.ஏ. செய்து வருகிறார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகையையொட்டி சிக்கமகளூரு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடூர், தரிகெரே பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விழா நடக்கும் கடூர், தரிகெரே பகுதியில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.