பத்மவிபூஷண் விருது அறிவிப்பு: எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் வாழ்த்து

பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.;

Update: 2023-01-27 18:45 GMT

பெங்களூரு:

எளிமையான அரசியல்வாதி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மந்திரிகள் ஆர்.அசோக், அஸ்வத் நாராயண், சுதாகர், கோபாலய்யா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எளிமையான அரசியல்வாதியும், சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்மவிபூஷண் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கன்னடர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் ஆகும். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதனால் மக்கள் பயன் அடைந்தனர்.

சில சீர்திருத்தங்கள்

அவரது ஆட்சி காலத்தில் யசஸ்வினி சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தினார். அப்போது நாட்டில் எங்கும் இத்தகைய காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கவில்லை. விவசாயிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. நான் அந்த திட்டத்தில் சில சீர்திருத்தங்களை செய்து ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன். மேலும் அவரது ஆட்சியில் தான் அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதை யாரும் மறக்க முடியாது. காவிரி, கிருஷ்ணா நதி நீர் பிரச்சினைகளில் அவர் எடுத்த முடிவுகள் எப்போதும் நினைவு கூரத்தக்கவை. அறிவுசார் வளர்ச்சிக்கு அவர் அதிக பங்களிப்பு வழங்கினார். பெங்களூருவில் தகவல், உயிரி தொழில்நுட்ப துறை வளர்ச்சி அடைய எஸ்.எம்.கிருஷ்ணாவே காரணம். அவரது இந்த சேவைகளை அடையாளம் கண்டு பிரதமர் மோடி அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கியுள்ளார். கர்நாடகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளன. இதற்காக கர்நாடகம் அவருக்கு எப்போதும் நன்றியுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்