சென்னை மீன்பிடி துறைமுகம் நவீனமயமாக்கப்படும்: மத்திய அரசு ஒப்புதல்

சென்னை மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Update: 2022-12-28 19:14 GMT

புதுடெல்லி,

மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நாடு தழுவிய செயற்கை கருவூட்டல் திட்டத்தின் கீழ் 604 மாவட்டங்களில் 3.3 கோடி கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டது. அரசு விந்து நிலையங்களில் 27.86 லட்சம் 'டோஸ்' விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தனியார் விந்து நிலையங்கள் மற்றும் பால் சம்மேளனங்களில் 31.12 லட்சம் 'டோஸ்'கள் சேகரிக்கப்பட்டன. தேசிய பால் தினமான நவம்பர் 26-ந் தேதி சிறந்த பால்பண்ணை விவசாயிகள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேசிய 'கோபால் ரத்னா' விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த நவம்பர் 21-ந் தேதி நிலவரப்படி 7 மாநிலங்களில் ரூ.355.25 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை மொத்தம் 23.70 லட்சம் புதிய உழவர் கடன்அட்டைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கருத்துருவை ஏற்று, தமிழகத்தில் ஒருங்கிணைந்த பன்னோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் மீன் உற்பத்தித்திட்டத்தின் கீழ் ரூ.127.71 கோடி மதிப்பில் இப்பூங்கா அமைக்கப்படுகிறது.

சென்னை, பாராதீப், கொச்சி, விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும், மல்லத்பந்தர் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான மொத்த செலவான ரூ.615.28 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்