சிறுத்தை தாக்கி மாடு செத்தது

பண்ட்வால் தாலுகாவில் சிறுத்தை தாக்கியதில் மாடு செத்தது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

Update: 2023-01-17 18:45 GMT

மங்களூரு:

பண்ட்வால் தாலுகாவில் சிறுத்தை தாக்கியதில் மாடு செத்தது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

வனவிலங்குகள் அட்டகாசம்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகாவில் கெல்தோடி உள்பட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் சிறுத்தை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை தடுக்கும் பணியை வனத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். எனினும், வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் பண்ட்வால் தாலுகா கெல்தோடி கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பா பூஜாரி. விவசாயி. இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும், இவருக்கு அந்த பகுதியில் பண்ணை வீடு, விளைநிலங்கள் உள்ளன. அவர் தனது கால்நடைகளை வழக்கம்போல் பண்ணை வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மாடுகளை அங்கு கட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார். அவர் வெளியே சென்று விட்டதால், மாடுகளை அழைத்து செல்ல அவர் வரவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே வனப்பகுதிக்குள் இருந்து சிறுத்தை ஒன்று அவரது பண்ணை பகுதிக்குள் புகுந்தது. அந்த சிறுத்தை அங்கு மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஒரு மாட்டை தாக்கி கொன்றது. மற்றொரு மாடு அங்கிருந்த கொட்டகைக்குள் சென்று தப்பித்தது. இதையடுத்து மறுநாள் காலையில் அவர் பண்ணைக்கு சென்றபோது ஒரு மாடு மட்டும் நின்றது. மற்றொரு மாடு பண்ணையின் மறைவான பகுதியில் செத்து கிடந்தது. அதன் கழுத்தில் காயங்கள் இருந்தன.

வனத்துறை ஆய்வு

அப்போது தான் அவருக்கு, சிறுத்தை தாக்கி மாடு செத்தது தெரிந்தது. இதையடுத்து அவர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சிறுத்தையின் கால்தடம் இருந்தது.

இதையடுத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும், அந்த பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் கூறினர். இரவு நேரத்தில் மாட்டை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவத்தால் கிராமத்தினர் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்