அரிசிகெரேவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியது
அரிசிகெரேவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை வனப்பகுதியில் விட்டனர்.;
ஹாசன்:
அரிசிகெரேவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை வனப்பகுதியில் விட்டனர்.
சிறுத்தை அட்டகாசம்
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா இரேசாவேயை அடுத்து உள்ளது பைராபுடி மற்றும் சங்கோதனஹள்ளி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் அடிக்கடி வெளியேறி கிராமத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தன.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தைகளை பிடிக்கவேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சி மேற்கொண்டனர்.
ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது. அந்த சிறுத்தை கூண்டில் கட்டி வைத்திருந்த ஆட்டை அடித்து தின்றுவிட்டு சென்றது. ஆட்டின் பாதி உடல் மட்டும் கூண்டில் இருந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் ஆடுகளின் எலும்புகளை கூண்டிற்குள் வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இறைதேடி வந்த சிறுத்தை வனத்துறையில் வைத்திருந்த கூண்டிற்குள் சிக்கியது. நேற்று காலை இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அரிசிகெரே மற்றும் சென்னராயப்பட்டணாவை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் சென்று சிறுத்தையை பார்வையிட்டனர். அப்போது பிடிபட்டது 7 வயது ஆண் சிறுத்தை என்று தெரியவந்தது. கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையா என்பது தெரியவில்லை.
வனப்பகுதியில் விடப்பட்டது
இதற்கிடையில் சிறுத்தையை கூண்டுடன் மீட்ட வனத்துறை அதிகாரிகள், அதை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். அதே நேரம் பைராபுடி மற்றும் சங்கோதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.