ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக மும்பை மாடல் அழகியிடம் பண மோசடி

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பை மாடல் அழகியிடம் ரூ.8½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-14 23:40 GMT

ரஜினியின் 'ஜெயிலர்' படம்

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஒருவரிடம் பண மோசடி நடந்துள்ளது. மும்பை வெர்சோவா பகுதியில் வசித்து வரும் சன்னா சுரி (வயது 29) என்பவர் தான் மோசடிக்கு ஆளான அந்த மாடல் அழகி ஆவார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பியூஷ் ஜெயின் என்பவர் 'பிளாக்கிளாத் ஈவன்ட்ஸ்' என்ற சமூக வலைத்தள கணக்கில் இருந்து மாடல் அழகியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டார். அவர் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஆட்கள் தேவைப்படுவதாகவும், இதில் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் மாடல் அழகியிடம் கூறினார்.

போஸ்டர்

மாடல் அழகி இதுகுறித்து அவரது தாய் வன்னிதாவிடம் தெரிவித்தார். வன்னிதா படவாய்ப்பு தொடர்பாக பியூஷ் ஜெயினை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பியூஷ் ஜெயின் தன்னை ஒரு 'காஸ்டிங்' இயக்குனர் என தெரிவித்தார். மேலும் உங்கள் மகள் சன்னா சுரியை போலீஸ் உடையில் நடிக்க வைத்து வீடியோ அனுப்பும்படியும் கூறினார்.

அடுத்த சில நாட்களில் பியூஷ் ஜெயின் வன்னிதாவை மீண்டும் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உங்கள் மகள் தேர்வாகிவிட்டதாக தெரிவித்தார். மேலும் மாடல் அழகி சன்னா சுரி, ரஜினிகாந்துடன் இருப்பது போன்ற ஜெயிலர் படத்தின் போஸ்டரையும் வடிவமைத்து வன்னிதாவுக்கு அனுப்பினார். இதனால் வன்னிதாவும், அவரது மகள் சன்னா சுரியும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அந்த போஸ்டரை மாடல் அழகி அவரது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

ரூ.8½ லட்சம் மோசடி

இந்தநிலையில் இன்னொருவரான சமீர் ஜெயின் என்பவரும் தன்னை காஸ்டிங் இயக்குனர் என கூறிக்கொண்டு மாடல் அழகியுடன் பேசினார். பின்னர் பியூஷ் ஜெயின், சமீர் ஜெயின் ஆகிய 2 பேரும் சேர்ந்து, இன்னும் 3 பிரபல நடிகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தையை அள்ளி வீசினர். இதனால் மாடல் அழகியும், அவரது தாயும் உற்சாக வெள்ளத்தில் மிதந்த வேளையில், காஸ்டிங் இயக்குனர்கள் என கூறிக்கொண்ட 2 பேரும் சேர்ந்து, நீங்கள் ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களுடன் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமான டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்தை கறந்தனர்.

வலைவீச்சு

இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் ஜெயிலர் படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் மாடல் அழகியின் தாய் வன்னிதாவை தொடர்பு கொண்டு பேசினார். அவர், மாடல் அழகி சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருப்பது ஜெயிலர் படத்தின் போலி போஸ்டர் என்ற திடுக் தகவலை தெரிவித்தார். நீங்கள் நினைப்பதை போல ஜெயிலர் படத்தில் நடிக்க உங்கள் மகளை தேர்வு செய்யவில்லை எனவும், பியூஷ் ஜெயின், சமீர் ஜெயின் ஆகிய 2 பேருக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த மாடல் அழகி, அவரது தாய் வன்னிதா சம்பவம் குறித்து மும்பை வெர்சோவா போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் காஸ்டிங் இயக்குனர்கள் என தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்