கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் அமளி; 10 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு...!
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு, அத்துமீறி நடந்து கொண்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.;
பெங்களூரு,
கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் இன்று அவையின் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். பெங்களூருவில் 2 நாட்களாக நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஈடுபடுத்தியதற்கு எதிராக அவர்கள் அவையில் கூச்சல் எழுப்பினர்.
எனினும், இந்த கூட்டத்தொடரில் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து சபாநாயகர் காதர், மதிய உணவுக்கு அவையை ஒத்தி வைக்காமல், பட்ஜெட் விவாதத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளார். தொடர்ந்து அவையை நடத்தும்படி துணை சபாநாயகர் ருத்ரப்பா லாமனியிடம் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 10 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் அஸ்வத் நாராயணன், வேதவியாச காமத், அரவிந்த பெல்லாட், தீரஜ் முனிராஜூ, யஷ்பால் சுவர்ணா, சுனில் குமார், ஆர். அசோக், உமாநாத் கோட்யான், அரக ஞானேந்திரா மற்றும் பாரத் ஷெட்டி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆவர். நடப்பு கூட்டத்தொடர் முடியும் வரை எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார்.