சந்திரயான் -3 ஜூலை 12-19க்குள் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன் - 3 விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. இதேபோல் விண்கலத்தை ஏவும் மார்க்-3 ராக்கெட்டும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கை கோள் மையத்தில் இருந்து சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.
விண்கலத்தில் தரை இறங்குதல், உலாவுதல் மற்றும் லேடர், ரோவர் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இந்நிலையில், தற்போது பரிசோதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விண்கலம் ஏவுதலின் போது எந்தவித இடையூறும் ஏற்படாதவண்ணம் விஞ்ஞானிகள் துல்லியமாக சோதித்து வருகின்றனர்.
இதேபோன்று சந்திராயன் 3 விண்கலத்தை ஏந்தி செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். அனைத்து சோதனைகளும் முடிந்தபிறகு இந்தியாவின் லட்சிய திட்டமான சந்திராயன்- 3 ஜூலை மாதம் 12-19-க்கு இடையில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படும் என்றார்.