சந்திரயான்-3 தரையிறங்குவது ஆகஸ்டு 27-ந்தேதிக்கு தள்ளி போக கூடும்...? இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 நாளை மறுநாள் தரையிறங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2023-08-21 15:29 GMT

ஆமதாபாத்,

சந்திரயான்-3 விண்கலம் வருகிற 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்தது. இதனால், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையத்தின் விஞ்ஞானி நிலேஷ் எம். தேசாய், ஆமதாபாத் நகரில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, லேண்டரின் தன்மை மற்றும் நிலவின் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தரையிறங்குவது பற்றிய முடிவு எடுக்கப்படும்.

ஆகஸ்டு 23-ந்தேதி சந்திரயான்-3 தரையிறங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு, அது தரையிறங்குவது அப்போது சரியா? இல்லையா? என நாங்கள் முடிவு செய்வோம். ஏதேனும் சாதகமற்ற காரணிகள் காணப்பட்டால், லேண்டரை ஆகஸ்டு 27-ந்தேதிக்கு தரையிறங்க செய்வோம்.

எந்தவித பிரச்சனையும் ஏற்பட கூடாது. அப்படி இருக்குமென்றால் நாங்கள், சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்டு 23-ந்தேதி தரையிறங்கும்படி செய்வோம் என கூறியுள்ளார். இதனால், அப்போது சூழலுக்கு ஏற்ப நிலவில் லேண்டர் தரையிறங்குவது முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது.

லேண்டர் இமேஜர் (எல்ஐ) கேமரா-1 மூலம் எடுக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் படங்களை, இஸ்ரோ டுவிட்டரில் பகிர்ந்தது. படங்களின் தொகுப்பு நிலவில் உள்ள வெவ்வேறு பள்ளங்களை காட்டியது.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிய தனது பயணத்தின்போது, சந்திரயான்-2 ஆர்பிட்டரோடு தொடர்பை ஏற்படுத்தி உள்ளது என்ற தகவலையும் இஸ்ரோ இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

நிலவில், நாளை மறுநாள் லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில், இந்த தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சந்திரயான்-3 லேண்டர் மற்றும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் இடையே இருவழி தொலைதொடர்பு ஏற்பட்டு உள்ளது. சந்திரயான்-3 லேண்டரை வெல்கம் பட்டி (வாருங்கள் தோழரே) என சந்திரயான்-2 ஆர்பிட்டர் வரவேற்றது.

இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள வழி ஏற்பட்டு உள்ளது. சந்திரயான்-3 விண்கல திட்டம் வெற்றி பெறும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்