நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது சந்திரயான்-3

நாளை சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.;

Update: 2023-08-04 14:19 GMT

ஸ்ரீஹரிகோட்டா,

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பின்னர், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத்தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 1-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான்-3 விண்கலம் நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்தகட்டமாக நாளை சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாளை மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை சந்திரயான்-3 நெருங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்