'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு
‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
2015-ம் ஆண்டு அம்பேத்கர், தலித் உரிமைகள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் தலைவராக சந்திரசேகர் ஆசாத் செயல்பட்டு வருகிறார்.
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான பீம் ஆர்மி அமைப்பு பங்கேற்றது.
இந்நிலையில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சந்திரசேகர் ஆசாத் இன்று மாலை காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மற்றொரு காரில் வந்த நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சந்திரசேகர் ஆசாத் மீது குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த சந்திரசேகர் ஆசாத் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச்சென்ற கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.