சந்திரசேகர ராவ் கட்சிக்கு அரசியல் சர்க்கஸ் போன்றது; மத்திய மந்திரி இரானி

சந்திரசேகர ராவ் கட்சிக்கு அரசியல் ஒரு சர்க்கசாக இருக்கலாம் என்றும் பா.ஜ.க. தொண்டர்களுக்கு அது தேச கட்டமைப்புக்கான ஊடகம் என்றும் மத்திய மந்திரி இரானி கூறியுள்ளார்.

Update: 2022-07-02 14:44 GMT



ஐதராபாத்,



தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஐதராபாத் நகருக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்காவை வரவேற்பதற்காக இன்று பேகம்பட் விமான நிலையத்திற்கு நேரில் சென்றார். அவருடன் மற்ற மந்திரிகளும் சென்றனர்.

பிரதமர் மோடி இதே விமான நிலையத்திற்கு வருகை தருவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன் இந்த வரவேற்பு நடந்துள்ளது. எனினும், பிரதமரை வரவேற்க தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி சார்பில் ஒரே ஒரு மந்திரி அனுப்பி வைக்கப்பட்டார்.

இது சர்ச்சையை கிளப்பியது. இதுபற்றி தெலுங்கானா மந்திரிகளில் ஒருவரான ஸ்ரீனிவாச யாதவ் கூறும்போது, ஏன் பிரதமரை வரவேற்க ராவ் செல்ல வேண்டும்? விதிகளின்படி, ஒரு மாநில பிரதிநிதி சென்று, வரவேற்பு அளிக்க வேண்டும். அதனால், ஒரு மந்திரியாக நான் சென்று அவரை வரவேற்கிறேன் என கூறினார்.

இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.சி. ராமசந்திர ராவ் கூறும்போது, பிரதமர் அல்லது ஜனாதிபதி விமான நிலையத்திற்கு வருகிறார் என்றால், அவரை அந்த மாநில முதல்-மந்திரி நேரில் சென்று வரவேற்க வேண்டும். இதுவே நெறிமுறை.

இதனை மீறுவது என்பது முறையாகாது. நாம் பிரதமரை மதிக்க வேண்டும். அவர், பா.ஜ.க.வுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் பிரதமராக இருக்கிறார். பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு பயம் என்று ராமசந்திர ராவ் கூறியுள்ளார்.

இந்நிலையில், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஐதராபாத் நகரில் இன்று பேசும்போது, மோடி அரசின் ஏழை, எளியோருக்கு உதவும் அரசின் நல கொள்கைகளை பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில் எங்களுடைய அரசு பெண்கள் அதிகாரம் பெற உழைத்துள்ளது. இளைஞர்கள் நாட்டுக்கு சேவையாற்ற உதவியுள்ளது என கூறியுள்ளார்.

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பற்றி குறிப்பிடும்போது, அவர் ஒரு தனிநபரை மட்டும் புண்படுத்தவில்லை. ஓர் அமைப்பையே புண்படுத்தியிருக்கிறார். அரசியல் சாசனத்தின் ஒற்றுமைக்கு அவர் தீங்கு ஏற்படுத்தி இருக்கிறார். சந்திரசேகர ராவ் கட்சிக்கு அரசியல் ஒரு சர்க்கசாக இருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தொண்டர்களுக்கு அது ஒரு சமூக விடுதலை மற்றும் தேச கட்டமைப்புக்கான ஓர் ஊடகம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்