சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி; தெலுங்கு தேச கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த தெலுங்கு தேச கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மாநில குற்ற புலனாய்வு துறை (சி.ஐ.டி.) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டார். வருகிற 23-ந்தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து, தெலுங்கு தேச கட்சி இன்று மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. எனினும், இன்று காலையில் வாகன போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் தலைவர்களை காவல் துறை வீட்டு காவலில் வைத்து உள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனசேனா, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், மாநிலத்தில் பதற்ற நிலை காணப்படுகிறது. இந்த சூழலில், ஆந்திர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொடிகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும், அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பஸ், ஆட்டோ உள்ளிட்டவற்றில் பணிக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். அவசர வேலையாக சென்றவர்களும் சிரமமடைந்தனர். இதனால், அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இதேபோன்று, சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், தமிழக-ஆந்திரா இடையேயான பஸ் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.